சிறந்த கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் நிதி
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த கிராம ஊராட்சிக்கு, உத்தமர்காந்தி விருதுடன் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த கிராம ஊராட்சிக்கு, உத்தமர்காந்தி விருதுடன் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிறந்த ஊராட்சி
கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டிலிருந்து மீண்டும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். இதனடிப்படையில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், வாழ்வாதாரம் நிறைந்த வறுமையற்ற கிராமம் ஏற்படுத்துதல், நோயற்ற ஊராட்சி, குழந்தைகள் நேய ஊராட்சி, நீர் நிறைந்த கிராமம், தூய்மையான மற்றும் பசுமையான ஊராட்சி, அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஊராட்சி, சிறந்த ஆளுமை ஊராட்சி, பாலின சமத்துவம் ஊராட்சி, ஊட்டச்சத்து குறைபாடில்லா கிராம ஊராட்சி என்ற காரணிகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சிக்கு, சிறந்த கிராம ஊராட்சிக்கான உத்தமர் காந்தி விருது வழங்கப்படவுள்ளது.
ரூ.10 லட்சம்
மேலும் தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த 5 கிராம ஊராட்சிகள் தேர்்வு செய்யப்படவுள்ளது, இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி-1, மகளிர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி-1, இதர சிறந்த கிராம ஊராட்சிகள்-3 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படும்., அதனை இயக்குநரக அளவில் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பின், அரசுக்கு முன்மொழியப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சிக்கு அரசால் விருது வழங்கப்படும்.
இவ்விருதிற்கான விவரத்தினை http://tnrd.tn.gov.in/, என்ற இணையதள முகவரியில் வருகிற 17-ந் தேதிக்குள் பதிவிட வேண்டும். மேலும், தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் முதல்-அமைச்சரால், உத்தமர் காந்தி விருதும், ரூ.10 லட்சம் தொகையும் வழங்கப்படும்
இத்தொகையானது தொடர்புடைய கிராம ஊராட்சியின் கணக்கு எண்.1 (ஊராட்சி பொது நிதி)-க்கு வரையறுக்கப்படாத நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, முன்னுரிமை பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.