கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-09-13 20:00 GMT

பொள்ளாச்சி

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வருபவர்களுக்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நிபா வைரஸ்

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் இறந்தனர். இதன் காரணமாக கேரளாவையொட்டி உள்ள தமிழக பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம் ஆகிய சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து பஸ், கார், லாரிகளில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் நபர்களுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பரிசோதனை

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 முதல் 14 நாட்களுக்கு பிறகு தலைவலி, இருமல், தொண்டை வலி, அதை தொடர்ந்து குழப்பமான மனநிலை ஏற்பட்டு கோமாநிலைக்கு தள்ளப்பட்டு இறக்க நேரிடுகிறது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதால், அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, அதில் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து காய்கறி, பால், கறிக்கோழி மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிபா வைரஸ் தாக்குதல் குறித்தும், அதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்