காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருக்க தொடங்கினர்.

Update: 2023-03-14 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருக்க தொடங்கினர்.

கொடியேற்றத்துடன் தொடக்கம்

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று முதல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

முன்னதாக காலை கணபதி பூஜையும் பின்னர் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புகட்டினர். மேலும் விழாவையொட்டி கோவில் முழுவதும் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்து.

பூக்குழி இறங்குதல்

தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கோவில் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

22-ந்தேதி காலை கோவில் பால்குடம், காவடி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.. 23-ந்தேதி இரவு அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும், 24-ந்தேதி மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகுபாண்டி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்