கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு 1 மணிநேரம் படகு சேவை தாமதம்
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வால் விவேகானந்தர் மண்டபத்துக்கு 1 மணிநேரம் படகு சேவை தாமதமானது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வால் விவேகானந்தர் மண்டபத்துக்கு 1 மணிநேரம் படகு சேவை தாமதமானது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலையும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகுத்துறையில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். அப்போது, திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்ந்தது. இதையடுத்து காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர், 9 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 1 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து விட்டு திரும்பினர்.