காரில் அடிபட்டு பெண் புள்ளிமான் சாவு
காரில் அடிபட்டு பெண் புள்ளிமான் செத்தது.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் விராலிமலை-கீரனூர் சாலை மற்றும் இலுப்பூர் சாலையை ஒட்டிய பகுதியில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டுப்பகுதியில் மான்கள், நரி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளது. இதில் மான்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு தோட்ட பகுதிகளுக்குள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் திரும்பும்போது சாலையில் செல்லும் வாகனத்தில் அடிபட்டு அடிக்கடி இறந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நால்ரோட்டில் உள்ள இலுப்பூர் சாலையில் 2 வயதுடைய பெண் புள்ளி மான் ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது. அப்போது இலுப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி வந்த கார் மீது சாலையை கடக்க முயன்ற மான் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. இதில் காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் வனச்சரக அலுவலர் பொன்னம்மாள் மற்றும் வனக்காவலர்கள் இறந்த மானை ஆவூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு உதவி கால்நடை மருத்துவர் பெமினாபேகம் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அதை கீரனூர் வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்று புதைத்தனர்.