பெண் டாக்டர் தூக்குப் போட்டு தற்கொலை

வேலூரில் காதல் திருமணம் செய்த 4 ஆண்டுகளில் பெண் டாக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவிகலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-11-07 17:50 GMT

வேலூரில் காதல் திருமணம் செய்த 4 ஆண்டுகளில் பெண் டாக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவிகலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

டாக்டர் தம்பதி

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமாரும் டாக்டராக பணிபுரிந்தார். செல்வகுமாரும், காயத்ரியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. டாக்டர் தம்பதியினர் சின்ன அல்லாபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்

இந்த நிலையில் செல்வகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை அவர் செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தூங்கி கொண்டிருப்பார் என்று மீண்டும் போன் செய்யவில்லை.

தூக்குப் போட்டு தற்கொலை

மதியம் 1 மணியளவில் செல்வகுமார் மீண்டும் செல்போனில் காயத்ரியை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போதும் அவர் போனை எடுக்காததால் இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு தெரிவித்து காயத்ரி குறித்து கேட்டுள்ளார். அதையடுத்து வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்துள்ளார். வீடு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. வாகனம் வெளியே நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக செல்வகுமாருக்கு தெரிவித்தார்.

அதனால் சந்தேகம் அடைந்த செல்வகுமார் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு அவசரமாக சென்னைக்கு திரும்பினார். அங்கிருந்து கார் மூலம் இரவு வீட்டிற்கு வந்தடைந்தார். செல்வகுமார் வெகுநேரம் தட்டியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கு மின்விசிறியில் காயத்ரி பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அவர் கதறி அழுதார்.

உதவிகலெக்டர் விசாரணை

பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், வேலை காரணமாக கணவன், மனைவியும் வீட்டில் குறைவான நேரங்களே ஒன்றாக இருந்துள்ளனர். இதுபற்றி காயத்ரி அடிக்கடி விரக்தியுடன் கணவரிடம் கூறி வந்துள்ளார். மேலும் குழந்தை இல்லை என்ற ஏக்கமும் அவரிடம் காணப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. திருமணமான 4 ஆண்டுகளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி வேலூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்