தூத்துக்குடியில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று காலையில் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியபோது, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் முன்வரிசை இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அப்போது மேயர், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருங்கள், இதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து தாங்கள் அனைவரும் வரிசையாக ஒரே பகுதியில் அமரும் வகையில் இருக்கை ஒதுக்க வேண்டும், என்று கூறினர்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். அதன் பிறகு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
வாகனங்களுக்கு கட்டணம்
மாநகராட்சிக்கு உட்பட்ட வி.இ.ரோடு, பாளையங்கோட்டை ரோடு, ஜெயராஜ் ரோடு, அண்ணா நகர் பிரதான சாலை, சிதம்பரநகர் பிரதான சாலை, திருச்செந்தூர் ரோடு நடைபாதையில் நிறுத்தம் செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், என்று வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த மேயர், கடைகளுக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படாது. சிலர் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இரவு-பகலாக வாகனம் அங்கே நின்று கொண்டு இருக்கிறது. அது போன்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள், என்று கூறினார்.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
இதனை ஏற்காத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஜெயராஜ் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் அமைந்து உள்ள 16 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதில் சில கடைகளுக்கு மட்டுமே ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு உள்ளது. அனைத்து கடைகளுக்கும் ஒப்பந்தப்புள்ளி பெறப்படாததால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டது. இதனால் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோன்று அண்ணாநகர் பகுதி, டூவிபுரம் 10-வது தெரு என்று ஆவணங்களில் உள்ளது. இதனால் வரி கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று மேயர் தெரிவித்தார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாத்திமாநகர் நகர்ப்புற சுகாதார நிலையத்தை மீண்டும் ஹோலிகிராஸ் பள்ளி அருகே பழைய இடத்துக்கு மாற்றம் செய்வது, சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் 1100 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லை. ஆகையால் அதன் எதிரே உப்புத்துறைக்கு சொந்தமான இடத்தில் 10 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பது, தமிழக முதல்-அமைச்சர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் விரைவாக வடிகால் அமைக்க அறிவுறுத்தி உள்ளார். அதே போன்று 60 வார்டுகளிலும் முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் அமைப்பது, பொதுமக்கள் தங்கள் சொத்துவரி விவரம் குறித்து 1.7.22 முதல் மாநகராட்சி இணையதளத்திலேயே அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது ஆகிய 4 தீர்மானங்களை மேயர் ஜெகன் பெரியசாமி கொண்டு வந்தார்.
அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் சாலை பணிகள் மேற்கொள்ளுதல், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சுகாதார பிரிவுக்கு வாகனங்கள் கொள்முதல் செய்தல் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள ரூ.32 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 5 பணிகள் மேற்கொள்ளவும், 43 பணிகளுக்கு நிர்வாக அனுமதி பெறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொகுசு பஸ்கள் புதிய பஸ்நிலைய வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு, இயங்கி வருகிறது. இந்த பஸ்களுக்கு நுழைவு கட்டணம் தினமும் ரூ.50 வசூலிப்பது என்பன உள்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் அருண்குமார், செயற்பொறியாளர் பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.