பெரம்பலூரில் மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை-தாலிகட்டிய தொழிலாளி கைது

பெரம்பலூரில், மது குடிக்க பணம் கிடைக்கும் என்பதற்காக 13 வயது மகளை திருமணம் செய்து கொடுத்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு தாலி கட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-01 18:48 GMT

குழந்தை திருமணம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 32), கூலித்தொழிலாளி. இவர் ஒரு தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்த, அவருடைய 13 வயதுடைய மகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அச்சிறுமியின் தந்தையும், வரதராஜின் தங்கை முத்துலட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வரதராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் சோ்த்தனர்.

தந்தைக்கு வலைவீச்சு

விசாரணையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிறுமியின் தந்தை மது குடிப்பதற்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார். தொடர்ந்து மதுகுடிப்பதற்கு பணம் கிடைக்கும் என்பதற்காக அவர் தனது மகளை வரதராஜூக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்ததாக போலீசார் தொிவித்தனர்.

மேலும் தலைமறைவான சிறுமியின் தந்தை மற்றும் முத்துலட்சுமி ஆகியோரை மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி அறிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும். இதேபோல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தால் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்