மருமகனை தாக்கிய மாமனார் கைது
நெகமம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது செய்யப்பட்டார்.
நெகமம்
நெகமத்தை அடுத்த வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 52). கூலி தொழிலாளி. இவருடைய மகள் நித்யா (29). இவருக்கும் பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (34) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகேந்திரனுக்கும், நித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் நித்யா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து மகேந்திரன் தனது மனைவியை அழைத்து வர வெள்ளாளபாளையத்துக்கு சென்றார். பின்னர் நித்யாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவருக்கும், மாமனார் ராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.