கொடுமுடி அருகே கார்- லாாி மோதல்; முதியவர் பலி; 6 பேர் படுகாயம்
கொடுமுடி அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடுமுடி
கொடுமுடி அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் பலி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வளந்தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தனர். க.ஒத்தக்கடை அருகே மாலை 6 மணி அளவில் சென்றபோது காரும், கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளே இருந்த ஊட்டி கலைஞர் நகரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 70) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த வளந்தாங்கோட்டையை சேர்ந்த கார்த்தி, சங்கர், செந்தில், குப்புசாமி, சசிதரன், சரவணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
படுகாயம்
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்ற லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.