கல்லூரிகளுக்கு இடையே நடந்த ஆடை அலங்கார போட்டி

நிப்ட்-டீ கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த ஆடை அலங்கார போட்டியில் 55-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-11-05 18:53 GMT


நிப்ட்-டீ கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த ஆடை அலங்கார போட்டியில் 55-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

நிப்ட்-டீ கல்லூரி

திருப்பூர் முதலிபாளையத்தில் நிப்ட்-டீ பின்னலாடை கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான 'இக்னீஷியா' என்ற தலைப்பில் கடந்த 2 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியை அடல் இன்குபேஷன் மையத்தின் முதன்மை செயல் அதிகாரி பெரியசாமி தொடங்கி வைத்து, ஜவுளித்துறையின் அதிநவீன கோட்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். ஏ.எப்.டி. துறை தலைவர் அருந்ததி கோஷல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், கல்லூரியின் வரலாற்று பாதை, அது செயல்படும் நோக்கத்தையும், பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகளின் தனித்துவத்தையும் கூறினார். ஜி.டி.பி. துறை தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார்.

காகித கட்டுரை விளக்கம், முக ஓவியம், சுவரொட்டி விளக்க காட்சி, சிகை அலங்காரம், காய், பழங்களில் அலங்காரம் செய்தல், படத்தொகுப்பு, வரைதல் திறன், புகைப்படக்கலை, மின்னணு கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு, கழிவுப்பொருட்களின் மகத்துவம், மருதாணி, விரல் நக ஓவியம், சிறந்த நிர்வாக திறன், விளம்பர படம், குறும்படம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

ஆடை அலங்கார அணிவகுப்பு

இரண்டாவது நாளில் தனிநபர் நடனம், குழு நடனம், மெய்ப்பாடு, ஆடை அலங்கார அணிவகுப்பு, சிறந்த வடிவமைப்பாளர், அதிகபட்ச பொருத்தம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் பெங்களூருவை சேர்ந்த கே.எல்.இ.எஸ். கல்லூரி, கேரளாவை சேர்ந்த எம்.இ.எஸ்.கல்லூரி, கார்மல் கல்லூரி, கோலிகிராஸ் கல்லூரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சத்தி, கோபி, ஈரோடு, கோவை போன்ற பகுதிகளில் இருந்தும் 55-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கலைத்திறமைகளை வெளிக்காட்டினார்கள்.

ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் மட்டும் 25 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இது அனைவரையும் கவர்ந்தது. நிப்ட்-டீ கல்லூரி மாணவர்களின் மூன்று ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. ஆடை வடிவமைப்பு, ஆடை தயாரிப்பு, துணிகளை தேர்ந்தெடுக்கும் விதம், துணிகளின் தன்மையை அறியும் விதம் போன்ற தனித்துவ கலைகளின் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் எஸ்.ஜி.சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுராக் மண்டல் நடுவராக செயல்பட்டார்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மோகன், துணை தலைவர்கள் பழனிச்சாமி, ரங்கசாமி, இணை செயலாளர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் டுவின் பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.

ஒட்டுமொத்த சேம்பியன் ஷிப் கோப்பையை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பெற்றது. மிஸ்டர் இக்னீஷியாவாக கே.எல்.இ.பேஷன் அன்ட் அப்பேரல் கல்லூரி நவீன், மிஸ் இக்னீஷியாவாக ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவி ஜெஸ்லானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் மேலாண்மைத்துறையை சேர்ந்த உமா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்