விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
திருக்கோவிலூர், முகையூர் மற்றும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் தரமான விதை நெல்கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்
சம்பா நடவு
தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த மழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம் முகையூர், கண்டாச்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகள் நீர் நிரம்பி வழிகிறது. தென்பெண்ணை ஆற்றிலும் தண்ணீர் வரத்து தொடங்கி விட்டதால் சம்பா நடவுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால் தரமான உளுந்து மற்றும் நெல் விதைகள் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விதை நெல்லுக்காக விவசாயிகள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
தரமற்ற விதை நெல்
மேலும் விவசாயிகளின் இந்த நிலையை அறிந்து கொண்ட போலி வியாபாரிகள் தரமற்ற விதை நெல்களை கொடுத்து நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இந்த விதைகளை வாங்கி சென்ற விவசாயிகள் பல ஆயிரம் செலவு செய்து நாற்றங்கால் தயாரித்து சரியான முளைப்பு இல்லாத காரணத்தால் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையை போக்க கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.