சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் மறியல்

சுங்குவார்சத்திரம் அருகே சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-01 07:52 GMT

சுங்குவார்சத்திரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம் பகுதியில் அரசு அனுமதியுடன் மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த மண் குவாரியில் சவுடு மண் எடுக்க ஏராளமான லாரிகள் ஸ்ரீபெரும்புதூர்-பேரம்பாக்கம் சாலையில் சென்று வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த சாலையில் மண் லாரிகள் வேகமாக மண் எடுத்த செல்வதால் விவசாய நிலங்களில் மண் விழுந்து காய்கறிகள் பாதிப்புக்குள்ளாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று விவாசாயிகள் ஸ்ரீபெரும்புதூர் -பேரம்பாக்கம் சாலையில் காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்த்தில் ஈடுப்பட்டனர். இங்கு மண் குவாரி இயங்ககூடாது. லாரிகளால் சேதம் அடைந்த காய்கறிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சாலை மறியலால் அங்கு 100- க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறித்த சுங்குவார்சத்திரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்க பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்