நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்

நெல்மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால், தியாகதுருகம் அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-15 18:45 GMT

தியாகதுருகம், 

சாலை மறியல்

தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூத்தக்குடி-கள்ளக்குறிச்சி சாலை பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கடந்த 15 நாட்களாக நெல் மூட்டைகள் எடை போடவில்லை எனவும், ஏற்கனவே எடை போடப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உத்தரவுக்காக காத்திருக்கிறோம்

இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் கடந்த 31-ந் தேதி மூடப்பட்டது. இதனால் வியாபாரிகளின் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், விவசாயிகளின் கைரேகையுடன் தற்போது பதிவு செய்யப்படுகிறது. அதன்படி விவசாயிகள் பலரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த மையத்தில் சுமார் 23 விவசாயிகள் நெல் மூட்டைகள் எடை போடுவதற்கான பதிவை செய்துள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதன் உத்தரவு கிடைத்தவுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்