பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

அன்னவாசல் பகுதிகளில் பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-10-02 19:10 GMT

அன்னவாசல்:

டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி

அன்னவாசல் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதோடு கால விரயமும் ஏற்படுவதால் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியை சேர்ந்த முத்துராமன் என்ற விவசாயி ட்ரோன் கேமராவை பயன்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

டிரோன் மூலம் 30 ஏக்கர்

விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பவர் ஸ்பிரேயர் மூலம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்க முடியும் என்ற நிலையில் டிரோன் மூலம் ஒரு நாளைக்கு 20 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை பூச்சி மருந்து தெளிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்து தேவை பாதியாக குறைகிறது.

ரூ.1,500 செலவாகிறது

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வயல்களில் செடிகளை மிதிக்காமல் மருந்து தெளிப்பதால் செடிகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை. இவற்றுடன் முக்கிய நன்மையாக நோய் பரவல் அதிக பரப்பளவில் இருக்கும் பொழுது இந்த வகை டிரோன் கருவி மூலம் பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதும் ஒரே நேரத்தில் மருந்து தெளிப்பதனால் நோய்களின் பரவுதல் தடுக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம். இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க தோராயமாக ஏக்கருக்கு ரூ.1,500 செலவாகின்றது. ஆட்கள் பற்றாக்குறை நிலவும் இச்சூழ்நிலையில் இத்தகைய ட்ரோன் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் நோய்கள் பரவு தலை உடனடியாக கட்டுப்படுத்தி விளை பொருட்கள் சேதமடையாமல் அறுவடை செய்ய முடியும் எனவும் தெரிவித்தனர்.

வாடகைக்கு விட வேண்டும்

அன்னவாசல் பெரிய குள நீர்பாசன சங்கத்தினர் கூறுகையில், பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை தற்போது எங்கள் பகுதி விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இனி அதிக அளவு விவசாயிகள் இந்த முறையை பின்பற்றுவர். தற்சயம் டிரோன் தஞ்சாவூரில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இதுபோன்று டிரோனை அன்னவாசல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாடகைக்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்