கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; வயல் பகுதியில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு
வயல் பகுதியில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வயல் பகுதியில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் விஷ்ணுவிடம் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மின்கட்டண உயர்வு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரித்துரை, மாநில இளைஞர் அணி பொதுச் செலாளர் ஜெகநாத ராஜா மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "தமிழக அரசு தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தொழில்கள் நலிவடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வரி, சொத்து வரியை உயர்த்தியது. எனவே ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என்று கூறிஉள்ளனர்.
வீட்டுமனைகள் பிரச்சினை
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பாளையங்கோட்டை வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த வேதாந்தம் உள்ளிட்ட விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் அருகில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "வெள்ளக்கோவில் பகுதியில் பாளையங்கால்வாய் பாசனவசதி பெற்ற அயன் நஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலத்தை உட்பிரிவு இன்றி வீட்டுமனைகளாக மாற்றி பத்திரம் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் வயல் பகுதியில் கட்டிட இடிபாடுகளை கொட்டி வருகிறார்கள். இந்த ஆவணங்களை ரத்து செய்து, பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆக்கிரமிப்பு
நெல்லை மாநகர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பர்கிட் யாசின் தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, அதில், ''பர்கிட் மாநகரில் நூலக கட்டிட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, நூலகம் செயல்படாமல் இருக்கிறது. அதை மீட்டு மீண்டும் அங்கு நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
முன்னதாக, முக்கூடல் கக்கன் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 21) மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதால், அவரது தந்தை சத்ரியனிடம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.