செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை கண்டித்து நெல் மூட்டைகளுடன் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் ; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை கண்டித்து நெல் மூட்டைகளுடன் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

செஞ்சி, 

அறிவிப்பு பலகை

செஞ்சியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இதற்கு செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல், உளுந்து உள்ளிட்ட பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.

இந்த நிலையில் இங்கு பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், இ-நாம் திட்டத்தின் மூலம் தானியங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் வரை விவசாயிகள் விற்பனைக்கூடத்துக்கு தானியங்களை எடுத்து வர வேண்டாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு அதிகாரிகள் தரப்பில் நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

மறியல்

இதனை அறியாத விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மாட்டு வண்டி, டிராக்டர், மினிலாரிகளில் ஏற்றி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்குள் இறக்கி வைக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், மினிலாரிகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார், அதிகாரிகளிடம் பேசி நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு, நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனைக்காக இறக்கி வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக செஞ்சி-திண்டிவனம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சினை குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்தபடி நேற்று நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. 100 சதவீதம் இ-நாம் திட்டம் மூலம் கொள்முதல் செய்வது குறித்து கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்த பிறகே, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்