மண்பானைகளை உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்

மண்பானைகளை உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-22 13:36 GMT

நதிகளை இணைத்து நீர்வழி சாலை அமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மண்பானைகளை உடைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை வாரியமும், உத்தரவிட்டபிறகும் கர்நாடக மாநிலம் மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் வெள்ளநீரை மட்டும் திறந்து விட்டு தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. இதனை தடுக்க கோதாவரி, காவிரி, வைகை, குண்டாறு, அய்யாறு ஆகிய ஆறுகளை இணைத்து நீர் வழி சாலை அமைக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்க நிறுவன தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மேகராஜ் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, விவசாயிகள் பலர் தங்களுடைய மேல் சட்டையை கழற்றி அரை நிர்வாணத்துடன் முகம், நெற்றி, உடலில் பட்டை நாமம் போட்டு இருந்தனர்.

சட்டி, பானைகளை உடைத்து...

மேலும் சட்டி, பானைகளை சாலையில் போட்டு உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தினால் சிந்தாமணி பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்