விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.
அரைநிர்வாண போராட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் அரைநிர்வாண காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.54 மற்றும் ஒரு டன் கரும்புக்கு ரூ.8,100 வழங்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணையை கட்டக்கூடாது. கோதாவரி-காவிரி இணைப்பிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை...
போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் தரப்பில் கூறும்போது, கோர்ட்டு 15 நாட்கள் மட்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகளை மீறாமல் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கி உள்ளது என்றனர்.