கோடை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபடும் விவசாயிகள்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் செலவை குறைக்க கோடை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் செலவை குறைக்க கோடை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முப்போக சாகுபடி
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடை சாகுபடியும் செய்யப்படுகிறது.
டெல்டா பாசனத்திற்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
கடைமடை பகுதி
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் பகுதிக்கு காவிரி நீர் போதுமான அளவு வருவதில்லை. இதனால் சேதுபாவாசத்திரம் கடைமடையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.
ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் மட்டும் கோடை சாகுபடி நடவு பணிகளை செய்து வந்தனர்.ஆனால் தற்போது நடவுப்பணி செய்தால் உழவு கூலி, அடியுரம், நடவு ஆட்கள் கூலி என வருவாயை விட கூடுதல் செலவு அதிகம் ஏற்படுகிறது.
நேரடி நெல் விதைப்பு
இதன் காரணமாக பல்வேறு விவசாயிகள் கோடை சாகுபடியை கைவிட்டு விட்டனர். நடவுப்பணிக்கு மும்முனை மின்சாரமும் சிப்ட் முறையில் வழங்குவதால் தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது.இதனால் ஒருசில இடங்களில் விவசாயிகள் செலவினத்தை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.