வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-21 18:43 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதிரிப்பட்டி பகுதியில் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை அமைத்து தர வேண்டும். க.பரமத்தி பகுதியில் விவசாயிகளுக்கு விதை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயனூர் கதவணை தொடர்பான கூட்ட அமர்வு நடத்த வேண்டும். சிங்கிளாபுரம் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கிளை வாய்க்கால் அமைத்து தர வேண்டும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொப்பரை தேங்காய் வழங்கியதற்கு பணம் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

ஏரி-குளங்களை தூர்வார வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் நீர் வழிப்பாதை சுத்தம் செய்து தர வேண்டும்.

வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேமிப்பதற்கு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். வெள்ளியணை பகுதியில் உள்ள ஏரியில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் வண்டல் மண் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.தோகைமலை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்