நெல்லை கொள்முதல் செய்வதுபோல் அரசே நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
நெல்லை கொள்முதல் செய்வதுபோல் அரசே நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூரியகாந்தி சாகுபடி
பெரம்பலூர் மாவட்டம் குன்னூர் தாலுகா பகுதிகளான சிறுகுடல், அருமடல், செங்குணம், பீல்வாடி, கீழப்புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். அதேபோல் எண்ணெய் வித்துப் பயிர்களான எள், சூரியகாந்தி ஆகியவற்றை சாகுபடி செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக சிறுகுடல் பகுதியில் மட்டும் 200 ஏக்கரில் சூரியகாந்தியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு
சூரியகாந்தி சாகுபடி ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களிலும் சாகுபடி செய்கிறார்கள். ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி செய்ய முடியும். பட்டத்துக்கு தகுந்தாற் போல் விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். சூரியகாந்தி சாகுபடியில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது அவசியம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்கப்பட வேண்டும்.
நிலத்தை உழுத பின் சூரியகாந்தி விதைகளை தகுந்த இடைவெளியில் குழிக்கு 2 விதைகள் வீதம் 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1½ கிலோ முதல் 2 கிலோ வரை விதை விதைக்க வேண்டும். உழவு, பாத்தி அமைக்க, விதை, நடவு என ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. 80 முதல் 90 நாள் பயிரான சூரியகாந்தி ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயம் நலிவடைய தொடங்கி உள்ளது. எனவே நெல்லை கொள்முதல் செய்வது போல் அரசே நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
100 நாள் வேலை திட்டம்
ராமசந்திரன்:- பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், சொட்டு நீர் பாசனத்துக்கு 100 சதவீத மானியம் என அறிமுகம் செய்தாலும், கூலியாட்கள் பற்றாக்குறையால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் ரூ.273 வரை கூலி வழங்கப்படுகிறது. விவசாய பணிகளுக்கு சென்ற 90 சதவீதம் பேர் தற்போது வேலை உறுதி அளிப்பு திட்டத்துக்கு செல்வதால், பருவத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தொழிலாளர்களின் பற்றாக்குறையால் வயலில் களையெடுக்கும் பணி கிடப்பில் போடப்படுகிறது. தொழிலாளர்கள் வருவதற்குள் வயலில் களை அதிகமாக வளர்ந்து விடுகிறது. அந்த களையை வெட்டுவதற்கு நாட்கள் அதிகமாவதுடன், செலவும் இரட்டிப்பாக அதிகரிக்கிறது. எனவே 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
கதிர்வேல்:- கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவு சூரியகாந்தி விதைகள் தான். மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும். அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்ட வேண்டும். மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இப்படி விளைவிக்கப்பட்ட சூரியகாந்தியை வியாபாரிகள் சொல்லும் விலைக்கே விற்கும் நிலை உள்ளது. அதிலும் சாக்கில் அள்ளி எடை போடும்போது உதாரணமாக 10 கிலோ 500 கிராம் இருந்தால் 10 கிலோவை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். கழிப்பது அதிகமாக இருப்பது விவசாயிகளுக்கு மேலும் நட்டத்தை ஏற்படுத்துகிறது. சூரியகாந்திக்கு அரசு விலை நிர்ணயித்துள்ளதா? என்று தெரியவில்லை. கிலோ 40-க்கு விற்றால் கண்டிப்பாக நஷ்டமே ஏற்படும். எனவே தமிழக அரசு சூரியகாந்திக்கு உரிய விலையை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய ஆவண செய்ய வேண்டும். நெல்லைக் கொள்முதல் செய்வது போல் அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கிலோ ரூ.40-க்கு கொள்முதல்
ராமலிங்கம்:- கடந்த ஆண்டு சூரியகாந்தி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுகுடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சூரிய காந்தியை அதிகளவில் பயிரிட்டுள்ளார்கள். ஆனால் தற்போது கிலோ ரூ.40-க்கு தான் சூரியகாந்தி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அறுவடை நேரத்தில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறையும் சூரியகாந்திக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விவசாயிகளுக்கு தெரிவிப்பதோடு உரிய விலையில் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
விதைகளை அரசே விற்பனை செய்ய வேண்டும்
மதியழகன்:- சூரியகாந்தி விதைப்புக்காக விதைகளை வாங்கும்போது விதைப்பொட்டலத்தின் விலை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. பெரம்பலூரை விட வீரகனூரில் விதை வாங்கும் போது விலை குறைவாக கிடைக்கிறது. நம் மாவட்டத்திலேயே இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஒரு பொட்டலத்தின் விலை ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்படுகிறது. சூரியகாந்தி விதைகளின் விலை பற்றிய விவரங்கள் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்றே தெரியாத நிலை உள்ளது. விதைகளின் விலைப்பட்டியலை வேளாண் துறையினர் வெளியிடுவதோடு விதைகளை அரசே விற்பனை செய்ய ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்த வாடகையில் அறுவடை எந்திரங்கள்
தியாகராஜன்:- சூரியகாந்தி 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு, விதைகளை பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி சுத்தம் செய்து வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் 1 கிலோ ரூ.40-க்கு தான் வாங்கி கொள்கின்றனர். மேலும் மழைக்காலத்தில் அறுவடை செய்வது மற்றும் பூக்களை காய வைப்பது கடினமான வேலையாகும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விட வாய்ப்பு உள்ளது.
சூரியகாந்தியைப் பயிரிடும் உழவர்களுக்கு அறுவடைக்கென்று ஒரு தனி செலவாகிறது. வேளாண் பொறியியல்துறை சார்பாக சூரியகாந்தி அறுவடை காலங்களில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அறுவடை எந்திரங்களை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். ஊர்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை முறையாக மண்புழு உரமாக மாற்றி உழவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச்செய்தால் உரத்திற்கான செலவு குறையும். அதோடு கிளிகளை விரட்ட ஒலி எழுப்பிகள் மற்றும் தார்ப்பாய்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதுடன், நெல்லைக் கொள்முதல் செய்வது போல் அரசே நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.