குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் - விவசாயிகள்
திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடைமடை பாசன பகுதி
காவிரியின் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய 6 ஒன்றியங்களும் வெண்ணாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட பாசன பகுதிகளாக உள்ளன.
நாகை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் 25 ஆயிரம் எக்டேர் பரப்பில் குறுவை சாகுபடியும், 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 36 ஆயிரம் எக்டேரில் தாளடி சாகுபடியும் நடைபெற்று வந்தது. திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் 13 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடைமடை பாசன பகுதியாக உள்ள நாகை மாவட்டத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது.
குறுவை சாகுபடி
கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீட்டுத்தொகையும் வழங்கப்படாததால் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடந்த ஆண்டு (2022) மேட்டூர் அணையில் இருந்து மே மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆறுகளுக்கு ஜூன் மாதம் வந்து சேர்ந்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தீவிரமாக செய்தனர்.
அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு இந்த மாதமே (மே) தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கையில் திருமருகல் பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.
தண்ணீர் திறந்து விட வேண்டும்
கடந்த காலங்களில் ஆறுகளில் தண்ணீர் வாரததால், குறுவை நெல் சாகுபடி செய்ய முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆறுகளில் காவிரி நீர் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என விவசாயிகள் கூறுகிறார்கள்.
இந்த பகுதியில் குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் ஆற்றில் தொடர்ந்து திறந்து விட வேண்டும் எனவும், தேவையான விதை, உரங்களை அரசு முழு மானியத்தில் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.