மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும்

அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-20 18:58 GMT

மினி சர்க்கரை ஆலை

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஆகையால் கரும்பு சாகுபடி விவசாயிகள் பயனடையும் வகையில் மினி சர்க்கரை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் ஏராளமான ஏக்கரில் சாமந்தி பூ சாகுபடி செய்யப்படுவதால் மேச்சேரி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கான நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

உழவன் செயலி

வீரகனூர் பகுதியில் மக்காச்சோளம், எள் உள்ளிட்ட தானியங்களை உலர வைக்க சாலையோரம், பாலம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உலர் கலன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசும்போது, பசுமை குடில் அமைப்பதன் மூலம் மலைப்பிரதேச பகுதிகளான ஏற்காடு, கருமந்துறை மற்றும் பச்சமலை பகுதிகளில் சாமந்தி, ரோஜா, ஜெர்பெரா மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயிர்களும், இதர பகுதிகளில் வெள்ளரி, குடை மிளகாய், தக்காளி மற்றும் கீரை வகைகளும் பயிரிடலாம். பசுமை குடில் அமைப்பதற்கு 50 சதவீதம் மற்றும் அதில் நடவு செய்யப்படும் பயிர்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. உழவன் செயலியை விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்