நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்

Update: 2023-07-12 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நுண்ணீர் பாசன திட்டம்

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனக்கருவிகள் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்களின் மூலம் விவசாயிகளின் வயல்களில் அமைத்து தரப்படுகிறது.

இத்திட்டத்திற்கு நடப்பாண்டு பொருள் இலக்காக 1,900 எக்டரும், நிதி இலக்காக ரூ.15 கோடியே 87 லட்சமும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனக்கருவிகள், தெளிப்பு நீர் பாசனக்கருவிகள், மழை தூவான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டு அதிவேகமாக நிலத்தடி நீர் குறைந்துவரும் குறுவட்டங்களில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதை கருத்தில் கொண்டு சுமார் 1,600 எக்டர் பரப்பிற்கு ரூ.13 கோடியே 48 லட்சம் மானியத்தில் இக்குறு வட்டங்களுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறலாம்

"ஒவ்வொரு சொட்டு நீரிலும் அதிக மகசூல் மற்றும் வருவாய்" என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி, மஞ்சள், வாழை, காய்கறிகள், தர்பூசணி, அனைத்து வகை பழமரங்கள், மலர்கள் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீர்பாசன கருவிகள் அமைத்துக்கொள்ளலாம். பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை "உழவன் செயலி மற்றும் tnhorticulture.tn.gov.in" என்ற இணையதளத்திலும் பதிவுசெய்யலாம். இத்திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்