தற்காலிக தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
தேவூர் அருகே தற்காலிக தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
தேவூர்:-
தேவூர் அருகே தற்காலிக தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளப்பெருக்கு
தேவூரை அடுத்த அரசிராமணி செட்டிபட்டி பாலம் அருகே மேட்டுக்காடு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சரங்கா நதியின் குறுக்கே விவசாயிகள் தற்காலிக பாலம் அமைத்து விவசாய பொருட்களை வாகனங்களில் விற்பனைக்காக கொண்டு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக சரபங்கா நதியில் குறுக்கே அரசிராமணி பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட தரைப்பாலங்கள் மற்றும் தற்காலிக தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதில் மேட்டுக்காடு தற்காலிக தலைப்பாலமும் அடித்து செல்லப்பட்டது, இதனால் மேட்டுக்காடுபகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள செங்கரும்புகள், மஞ்சள், நெல் உள்ளிட்ட விளை பொருட்களை சரபங்கா நதியை கடந்து விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வந்தனர்.
தரைப்பாலம்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விவசாயிகளே தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசிராமணி பேரூராட்சி நிர்வாகத்தினர் சென்று அந்த பகுதியில் தரைப்பாலம் அமைத்தால் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தண்ணீர் செல்லும். மேலும் தண்ணீர் தேங்கினால் வயக்காடு பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி பாதிக்கப்படும் என்றும், இதை தவிர்த்து வேறு வழியில் பாதை அமைத்து தருகிறோம் என்றும் தெரிவித்தனர். மேலும் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கக்கூடாது என்றும் கூறினார்.
சாலை மறியல்
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தரைப்பாலம் கேட்டு செட்டிபட்டி பாலம் அருகே எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ், கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன் மற்றும் வருவாயத்துறையினர், தேவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இதுசம்பந்தமாக மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தற்காலிக பாலம் அமைத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.