தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-09-29 18:45 GMT

முற்றுகை

சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தோளில் பச்சைநிற துண்டு அணிந்துகொண்டு நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள், கனியாமூர் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிவரும் கழிவுகள் சுகாதாரமற்ற முறையில் கனியாமூர் சாலையில் விடப்படுகிறது.

துர்நாற்றம்

இதனால் துர்நாற்றம் வீசுவதால், எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு, தொற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கிணறு மற்றும் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைகிறது. எனவே சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையில் உரிய அனுமதி பெற்று அந்த தனியார் தொழிற்சாலை இயங்குகிறதா என கலெக்டர் ஆய்வு செய்து அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்த மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்