வனத்துறையினருடன், விவசாயிகள் வாக்குவாதம்
விவசாய பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:-
தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் அகலக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுப்பாலம், தேர்வீதி கிராம பகுதிகளில் விவசாயிகளின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சேதமான பயிர்களை பார்வையிட வந்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது வனத்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு உண்டானது. அதன்பிறகு பயிர்கள் சேதமான தோட்ட உரிமையாளர்கள் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.