விவசாயிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை கேட்டு போராட்டம்

சிறு தொழில் பயிற்சி முடித்த விவசாயிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-26 20:15 GMT

சிறு தொழில் பயிற்சி முடித்த விவசாயிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பயிற்சி

துவரங்குறிச்சி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் வெப்பமண்டல பழப்பயிர்களுக்கான மகத்துவ மையம் உள்ளது. அரசின் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இம்மையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஊரக மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு, கைவண்ணபொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட சிறுதொழில் பயிற்சி நான்கு வாரம் நடைபெற்றது. இதில் பயிற்சி பெறும் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையும், சான்றிதழும் பயிற்சிக்குப்பின் வழங்கப்படும் என மகத்துவமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 பேர் பயிற்சி முடித்த நிலையில் பயிற்சி முடிந்து 6 மாதத்திற்கு மேலாகியும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவில்லையாம்.

போராட்டம்

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என கூறி விவசாயிகள் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள வெப்ப மண்டல பழப்பயிர்களுக்கான மகத்துவ மைய அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டிசம்பர் முதல் வாரத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்காவிட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்