விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதி விவசாயிகள் சார்பில் கலெக்டர் அரவிந்திடம் வழங்கப்பட்டது. அதன் பிறகு மழை அளவு மற்றும் அணைகளில் நீர் இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய பிரதிநிதிகளும் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
குமரி மாவட்ட வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா உரம் கிடைப்பது இல்லை. உழவன் செயலியில் யூரியா இருப்பு உள்ளதாக காட்டுகிறது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்துக்கு சென்று கேட்டால் உரம் இல்லை என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் விவசாயிகளுக்கு என 25 உர மூடைகளை தனியாக வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து யூரியா உர மூடைகள் தனியாருக்கு விற்கப்பட்டு விடுகிறது. எனவே விவசாயிகளுக்கு யூரியா உரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
குமரி மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் நேரங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் திட்டுவிளையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. எனவே அங்கு செட் அமைத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஆரல்வாய்மொழி வைகைகுளம் புரவு பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வடிகால் அமைத்து தர வேண்டும். கல்குளம் தாலுகாவில் இரணியல் பிரிவு கால்வாய்களில் நெய்யூர் முதல் கடைமடை பகுதி வரையிலான நெய்யூர் கால்வாய், குளச்சல் கால்வாய், சேரமங்கலம் கால்வாய், திக்கணங்கோடு கால்வாய், சேனம் விளை மற்றும் செம்பொன் விளை கால்வாய் ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவாளக்குறிச்சி பெரிய குளத்தின் மறுகால் ஓடையை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் பதில்
இதற்கு கலெக்டர் அரவிந்த் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் யூரியா உரம் கடந்த 4 நாட்களுக்கு முன் வந்துள்ளது. அது கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாதத்துக்குள் இன்னும் 150 டன் உரம் வர உள்ளது. அதுவும் உடனுக்குடன் வினியோகம் செய்யப்படும். திட்டுவிளையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படும். வைகைகுளம் புரவு மறுகால் ஓடையில் பெட்ரோல் பங்க் அருகில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கீழ்மடை அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு மழைநீர் தேங்கி இருக்கலாம். அந்த ஓடையை சரி செய்து தரும்படி கேட்டுள்ளோம். இரணியல் பிரிவு கால்வாய்களில் ரெயில்வே துறை மூலம் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தூர்வாரப்படும். பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். 25 ஆயிரம் பேர் இன்னும் இணைக்காமல் உள்ளனர். எனவே அவர்களும் உடனடியாக இணைக்க வேண்டும்" என்றனர்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, வேளாண்மை இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ, முருகேசபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.