கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தியாகதுருகம் அருகே கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-09-27 18:45 GMT

தியாகதுருகம்

தினசரி வருவாய்

தியாகதுருகம் பகுதியில் விவசாயிகள் நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், மணிலா உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் 4 மாதம், 6 மாதம், மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

இந்த நிலையில் தினசரி வருமானம் கிடைக்கும் வகையில் விவசாயிகள் பலரும் கால்நடைகளை வளர்த்தல் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும் சில விவசாயிகள் சம்மங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது, எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்துள்ளேன். நடவு செய்ததில் இருந்து 65 நாட்களுக்கு பிறகு பூக்களை பறிக்க தொடங்கலாம். தொடர்ந்து 60 நாட்கள் பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியும். சாகுபடி மற்றும் பராமரிப்புக்காக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ளேன். ஒரு ஏக்கரில் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் கிலோ வரை பூக்கள் கிடைக்கும். அறுவடை செய்த பூக்களை தியாகதுருகம் பகுதியில் கிலோ ரூ.30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்கிறேன். மற்ற பயிர்களை காட்டிலும் கூடுதல் லாபம் மட்டுமின்றி தினசரி வருமானமும் கிடைக்கிறது. எனவே பூக்கள் சாகுபடி குறித்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்