நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-09-05 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மற்றும் வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால் மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் இந்தாண்டு விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ளும் வகையில் தங்களது நிலங்களை உழுது சீரமைத்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது வயல்களில் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக விரைவில் தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

மேலும் விரைவில் பருவமழையும் தொடங்க உள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என நாங்கள் கருதுகிறோம். எங்களைப்போன்ற விவசாயிகள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பல இடங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்ந்துபோய் உள்ளது.

வாய்க்காலை தூர்வார வேண்டும்

இதன் காரணமாக கடைமடை பகுதி வரை வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க பருவமழைக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீராணம் ஏரி பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும். அவ்வாறு செய்தால்தான் கடைகோடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் சீராக செல்லும். இதன் மூலம் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அமோக விளைச்சலை கொடுக்கும். எனவே விவசாயிகள் நலன் கருதி பாசன வாய்க்கால்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்