டிராக்டரை ஏற்றி விவசாயி கொலை; ஊராட்சி துணைத்தலைவர் கைது

டிராக்டரை ஏற்றி விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-10 18:50 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 62). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள மண்ணை அதே ஊரை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான பாஸ் என்கின்ற பாஸ்கரன் என்பவரிடம் செங்கல்சூளை பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட தொகைக்காக விற்றதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அங்கு மணல் எடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மணல் ஏற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விவசாயி ராஜேந்திரன், மணலுக்கு பேசியபடி தொகை தராமல் எப்படி மண் ஏற்றுகிறீர்கள்? என கேட்டு டிராக்டர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

டிராக்டரை ஏற்றி கொலை

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது டிராக்டர் டிரைவர், டிராக்டரை விவசாயி ராஜேந்திரன் மீது ஏற்றி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்து வந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ் என்கின்ற பாஸ்கரன் (45), டிராக்டர் டிரைவர் பாலா என்கிற பாலசுப்பிரமணியன்(32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்