நெற்பயிருக்கு மருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து சாவு:நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

கூடலூரில் நெற்பயிருக்கு மருந்து தெளிந்த விவசாயி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-08 18:45 GMT

கூடலூர் 19-வது வார்டு காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 54). விவசாயி. சம்பவத்தன்று இவர், தனது மகன் பால்பாண்டியுடன் (24) கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு புலம் பகுதியில் உள்ள வயலில் நெற்பயிருக்கு 'ஸ்பிரேயர்' மூலம் பூச்சிமருந்து தெளித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபோது திடீரென மயக்கம், சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாண்டியனை அவரது குடும்பத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பால்பாண்டி, லோயர்கேம்ப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல், கடந்த வாரம் வயலில் மருந்து தெளித்த விவசாயி குணசேகரன் என்பவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து தற்போது பாண்டியன் இறந்த சம்பவம் கூடலூர் பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே 2 பேரின் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில், நிவாரணம் வழங்கக்கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு தலைமை தாங்கினார். முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன் முன்னிலை வகித்தார். இதில் 2 பேரின் உறவினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். வீரியமிக்க மருந்தை தடை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்