ஆற்றில் மூழ்கிய விவசாயி பிணமாக மீட்பு

கருவேப்பிலங்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கிய விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-12-03 18:45 GMT

கருவேப்பிலங்குறிச்சி, 

கருவேப்பிலங்குறிச்சி அருகே பாசிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 65), விவசாயி. நேற்று முன்தினம் இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வெள்ளாறு கரைப்பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது 2 மாடுகளும், தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றில் இறங்கியது. இதில் எதிர்பாராதவிதமாக மாடுகள் சேற்றில் சிக்கியது. இதை பார்த்த மணி, அந்த பகுதியில் நின்றிருந்த ஆறுமுகம்(60) ஆகியோர் ஆற்றில் இறங்கி மாடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆறுமுகம் 2 மாடுகளையும் மீட்டு கரைக்கு ஓட்டிவந்தார். ஆனால், மணி நீரில் மூழ்கினார். இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி மணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மணியை தீயணைப்பு வீரர்கள் தேடினர். இதில் மாடுகள் சேற்றில் சிக்கிய இடத்தில் மணி பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாடுகளை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் இறங்கிய மணி, மாடுகளின் காலில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது மாடுகள் அவரை தண்ணீரில் அழுத்தியதில் மணி சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து மணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்