4 ஆயிரம் ஏக்கர் களரி கண்மாய் பாசன விவசாயம் பாதிப்பு

கடலில் கலந்து வீணாகிய நிலையிலும் வைகை தண்ணீர் வந்து சேராததால் 4 ஆயிரம் ஏக்கர் களரி கண்மாய் பாசன விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-12-19 18:07 GMT


கடலில் கலந்து வீணாகிய நிலையிலும் வைகை தண்ணீர் வந்து சேராததால் 4 ஆயிரம் ஏக்கர் களரி கண்மாய் பாசன விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோடை மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்தில் நல்ல மழை பெய்தது. வைகை அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப் பட்டது. இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீர் வரும் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது.

இந்த ஆண்டு மாவட்டத்தின் 3-வது பெரிய கண்மாய் என்று கருதப்படும் களரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு சேர்க்க உள்ளதாக பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி களரி கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்பதுதான் வேதனையான விசயம்.

சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த கண்மாய் ஏறத்தாழ ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவை கொண்டது. களரி, கொம்பூதி, ஆலங்குளம், குளபதம், மல்லல், மேலமடை, நல்லிருக்கை உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கடந்த காலங்களில் இந்த கண்மாய்நீரை பயன்படுத்தி 2 போக விவசாயம் செய்து வந்துள்ளனர். களரி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட களரி கால்வாய் வழியாக கடந்த பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை.

இதற்கு காரணம் இந்த களரி கண்மாய்க்கு செல்லும் வழியில் 26 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் எடுத்து கொள்வதால் களரி கண்மாய்க்கு தண்ணீர் செல்வது முடியாத காரியமாக உள்ளது. மூஞ்சான் என்ற இடத்தில் களரி கால்வாய் நடுவில் 20 அடி பாதை கரையில்லாமல் உள்ளது. இந்த பாதை வழியாக தண்ணீர் வீணாகிவிடுவதால் களரி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடிவதில்லை.

கோரிக்கை

இந்த பகுதியில் பாதை அமைத்து கரை ஏற்படுத்துவதோடு, வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தற்காலிக சிறிய கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் வாடி கருகிவரும் நெற்பயிர்களை காப்பாற்ற முடிவதோடு, மிளகாய், பருத்தி, மல்லி விவசாயத்திற்கு பயன் உள்ளதாக அமையும். இல்லாவிட்டால் கடந்த ஆண்டுகளை போல இவ்வளவு வைகை தண்ணீர் வந்தும் விவசாயம் இன்றி பெரும் நஷ்டம் ஏற்படும் என்று களரி கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்