வீரர்-வீராங்கனைகளுக்கு வழியனுப்பு விழா

ரோல்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழா, சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

Update: 2023-08-13 19:45 GMT

கேரள மாநிலம் கொல்லத்தில் தென்னிந்திய அளவில் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான ரோல்பால் போட்டிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொள்கின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர்-வீராங்கனைகள் தேர்வு, தஞ்சாவூரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணிக்காக 12 பேரும், பெண்கள் அணிக்காக 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 24 பேருக்கும் கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடந்தது. ரோல்பால் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் மாவட்ட தலைவரும், சர்வதேச நடுவருமான பிரேம்நாத், ரோல்பால் சங்கத்தின் மாநில செயலாளர் கோவிந்தராஜ், மூத்த பயிற்றுனர்கள் ராஜசேகர், பிரதீப், தீபக், அணி மேலாளர் தங்கலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி அளித்தனர்.

இந்தநிலையில் பயிற்சி பெற்ற 24 பேருக்கும் தென்னிந்திய போட்டியில் பங்கேற்க வழியனுப்பு விழா, சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு தமிழக அணி சார்பில் ரோல்பால் போட்டியில் விளையாட செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்