பிரபல சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஆயிரம் படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதிய சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
சென்னை,
பிரபல சினிமா கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். இவர் சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. இறுதி சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
மரணம் அடைந்த ஆரூர்தாசுக்கு ரவிச்சந்தர் என்ற மகனும், தாராதேவி, ஆஷாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர்.
திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ் சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக சென்னைக்கு வந்தார். 1955-ம் ஆண்டு தஞ்சை ராமதாசின் உதவியாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கி வாழவைத்த தெய்வம் என்ற திரைப்படத்திற்கு முதன் முதலில் வசனம் எழுதினார்.
எம்.ஜி.ஆர்-சிவாஜி
எம்.ஜி.ஆர். நடித்த 'தாய் சொல்லை தட்டாதே', 'தாயைக்காத்த தனயன்', 'பரிசு', 'தனிப்பிறவி', 'தொழிலாளி', சிவாஜி கணேசன் நடித்த 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா', 'அன்னை இல்லம்', 'பார் மகளே பார்', 'புதிய பறவை', 'நான் வாழவைப்பேன்' மற்றும் 'சுமங்கலி', 'விதி' உள்பட பல படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ளார்.
1000 படங்கள்
தமிழ் படங்கள் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை-வசனம் எழுதி இருக்கிறார். தமிழில் கடைசியாக 2014-ம் ஆண்டு வடிவேல் நடித்து வெளிவந்த 'தெனாலிராமன்' என்ற படத்துக்கும் அவர் வசனம் எழுதி இருந்தார்.
1967-ம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் 'பெண் என்றால் பெண்' என்ற திரைப்படத்தை இயக்கினார். பீம்சிங், திருலோகசந்தர், திருமுகம் உள்பட அப்போதைய முன்னணி இயக்குனர்களுடன் ஆரூர்தாஸ் பணியாற்றியுள்ளார். பல மேடை நாடகங்களையும் அவர் எழுதி இயக்கி இருக்கிறார்.
பல்வேறு விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது, கவிஞர் வாலி விருது, மக்கள் கவிஞர் விருது, கலைத்துறை வித்தகர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சினிமாவில் தனக்கென தனி இடம் பதித்த ஆரூர்தாசின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஆரூர்தாஸ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி கலைஞரின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன். தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும்.
கதை வசனகர்த்தா ஆரூர்தாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.