தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்

தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று ஓசூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தம்பிதுரை எம்.பி. பேசினார்.

Update: 2022-12-17 18:45 GMT

ஓசூர்

தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று ஓசூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தம்பிதுரை எம்.பி. பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சி.பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.

இதில், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் முதம்பிதுரை எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தம்பிதுரை எம்.பி. பேசுகையில், திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்தில் இருந்து வாரிசு என்று யாரும் கிடையாது. அவர்களுக்கு நாம் தான் வாரிசுகள். ஆனால் தி.மு.க.வில் உள்ள வாரிசு அரசியலை போன்று நேரு குடும்பத்திலும் இருந்தது இல்லை. உதயநிதி ஸ்டாலினை அடுத்த முதல்வர் ஆக்குவதற்காக இப்போது அவரை அமைச்சராக்கி மு.க.ஸ்டாலின் பட்டாபிஷேகம் செய்து விட்டார். தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு, தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர். இனி யாரும் அவரை, இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைக்கக்கூடாது. குடும்ப அரசியலையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும். இதனால் தான் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று பேசினார்.

வாக்குறுதி

ஆர்ப்பாட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகையில், சட்டமன்ற தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை மாதம் ஒரு முறை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்ந்து விட்டது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். அதேபோல் பால் விலை, ஆவின் நெய் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. தி.மு.க. அரசு, மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், தொல்லை தரக்கூடாது என்று பேசினார்.

இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் அசோகா, மஞ்சுநாத், மாவட்ட எம்.ஜிஆர். மன்ற தலைவர் சாக்கப்பா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில், தெற்கு பகுதி செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்