ஜாமீன் பெற போலி ஆவணம் தயாரித்த வழக்கு: போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை காவலில் எடுத்து விசாரணை

ஜாமீன் பெற போலி ஆவணம் தயாரித்த வழக்கில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீண்டும் சிறையில் அடைக்க முடிவு செய்து சென்னைக்கு அழைத்துசென்றனர்.

Update: 2022-09-23 21:09 GMT

பெத்தநாயக்கன்பாளையம்,

போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சொந்தமான எஸ்டேட் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த சசிகுமார் என்பவர், எஸ்டேட்டை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் சசிகுமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சசிகுமார் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, அவர், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறி பல்வேறு இடங்களில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர சேலம், ஈரோடு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

முன் ஜாமீனுக்கு போலி ஆவணம்

இதற்கிடையே சென்னையில் ஒரு வழக்கில் சசிகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கருமந்துறை போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் பெற சசிகுமார், போலி ஆவணங்கள் தயார் செய்ததாகவும் தெரிகிறது.

இதனை அறிந்த கருமந்துறை போலீசார், ஜெயிலில் உள்ள சசிகுமாரை கைது செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக சசிகுமாரிடம் விசாரணை நடத்தலாம் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து சசிகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க ஆத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

காவலில் விசாரணை

சசிகுமாரை ஒருநாள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைதொடர்ந்து சென்னை புழல் ஜெயிலில் இருந்த சசிகுமாரை போலீசார் பாதுகாப்புடன் சேலம் அழைத்து வந்தனர்.

இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், சசிகுமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், பல்வேறு இடங்களில் இளைஞர்களிடம் வேலைவாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மீண்டும் சிறையில் அடைப்பு

இதற்கிடையே போலீஸ் காவல் முடிவடைந்து சசிகுமார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைக்க போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

சசிகுமாரிடம் விசாரணை நடத்திய போது, வேலைவாங்கி தருவதாக ஏராளமானவர்களிடம் பணம் வாங்கி இருந்ததால், போலியாக ஆவணங்களை தயார் செய்து பணி நியமன ஆணை ஏதும் வழங்கி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்