எஸ்.பி.வேலுமணி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - ஐகோர்ட் உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

Update: 2022-09-09 16:29 GMT

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 7-ந்தேதி விசாரணைக்கு வந்த போது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு(இன்று) தள்ளிவைத்தனர்.

இதையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் வீசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி மீதான பெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கின் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்