காட்டுத்தீயில் வெடித்துச் சிதறிய வெடிபொருட்கள் - கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனை
நாடுகாணி வனப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில், அந்த வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின.
இதையடுத்து அப்பகுதியில் சோதனையிட்ட வனத்துறையினர், வெடிக்காத வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நாடுகாணி வனப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சட்டவிரோத தங்க சுரங்கங்களில் பயன்படுத்துவதற்காக இந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.