வெடித்து சிதறிய மின்சார கேபிள் - திடீர் தீ விபத்தால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பதற்றம்

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர்.

Update: 2023-04-03 19:45 GMT

சென்னை,

சென்னையில் தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெளிநோயாளிகளாக ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் நுழைவுவாயில் அருகே சென்ற மின்சார கேபிள் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி உடனடியாக மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக மின்சாரத்தை தடை செய்தனர். பின்னர் மின்சார கேபிளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு போராடி அணைத்தனர். அதன்பிறகு மின்சார கேபிளில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று உடனடியாக சீரமைக்கப்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவிற்கு உள்ளே செல்பவர்கள் காலணிகளை கழற்றி வைப்பதற்காக ஸ்டாண்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டாண்டு வழியாக மின்சார கேபிள் சென்ற நிலையில் அதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரியளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்