சோதனை முறையில் அலங்கார வாழைக்கன்றுகள் நடவு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சோதனை முறையில் வீரிய ரக அலங்கார வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-03-13 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சோதனை முறையில் வீரிய ரக அலங்கார வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

அலங்கார வாழைக்கன்றுகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்ப வெப்பநிலையில் பல்வேறு மலை காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 200 வகை வீரிய ரக அலங்கார வகை வாழைக்கன்றுகளை சோதனை அடிப்படையில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் நட முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பதப்படுத்தப்பட்ட ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மேம்பாட்டு ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் செல்வராஜன் மற்றும் 40 முன்னாள் பட்டதாரி மாணவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட பூந்தொட்டிகளில் நேற்று வாழைக்கன்றுகளை நடவு செய்தனர்.இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

3 மாதங்களில் பூக்கும்

வீரிய ரக அலங்கார வகை வாழையானது மூசா ஆர்னேட்டா, மூசா ரூப்ரா, மூசா வெலுட்டினா மற்றும் மூசா அக்குமினேட்டா ஜேப்ரினா வகைகளை கொண்டு இனக்கலப்பு மூலம் உருவாக்கப்பட்டது. இந்த அலங்கார வாழை ரகங்களின் பூ மடல்கள், கண்களை கவரும் வண்ணமயமான அடர் பழுப்பு நிறத்தை கொண்டது. இந்த அலங்கார வாழையானது கொய்மலர்களாகவும், மலர் அலங்காரம் செய்யவும், பூச்செண்டு தயாரிப்பதற்கும், சுவர் அலங்காரம் செய்வதற்கும் பயன்படும்.

இதன் உயரம் குறைவாக இருப்பதால் தொட்டி செடிகளாகவும் வளர்க்கலாம். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட அலங்கார வாழைகள், அடுத்த 3 மாதங்களில் பூக்க தொடங்கும். நல்ல பலன் அளிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு கோடை விழாவில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ராமஜெயம், தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்பசாமி, தோட்டக்கலை துணை இயக்குனர் பாலசங்கர், நபார்டு பொது மேலாளர் இங்கர்சால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்