அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் கண்காட்சி - கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
சென்னை வியாசர்பாடியில் அறியப்படாத தேசிய சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் கண்காட்சியை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
சென்னை,
இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெய்சுயா அறிவுசார் கல்வியகம் மற்றும் தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத தேசிய சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் 'அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்' என்ற தலைப்பில் ஓவிய பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் அவர் அங்கு இடம்பெற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை பார்வையிட்டு, மாணவர்களின் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை பாராட்டினார்.
மாணவர்களின் பணி, எவ்வாறு கவனிக்கப்படாத இந்த நாயகர்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த ஆழ்ந்த துன்பங்கள் மற்றும் தியாகங்களை சிறப்பித்துக் காட்டுகிறது என்பதையும் அதே நேரத்தில் அந்த சுதந்திர போராட்ட வீரர்களால் கற்பனை செய்யப்பட்ட பாரதத்தை நனவாக்க வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கிறது என்பதையும் கவர்னர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.