செயல் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வை 1,147 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை செயல்அலுவலர் பணிக்கான போட்டித்தேர்வை 1,147 பேர் எழுதினர். 931 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2022-09-10 19:25 GMT

போட்டித்தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 42 செயல் அலுவலர் பணியிடங்களுக்கான குரூப்-7 பி போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. காலையில் 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தமிழ்மொழி தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்து சமயம் சார்ந்த பொது அறிவு தேர்வும் நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 2,078 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி, தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 5 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த 2,078 பேரில் 1,147 பேர் தேர்வை எழுதினர். இது 55.20 சதவீதம் ஆகும். 931 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

7 மையங்கள் தயார்

இதேபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறநிலையத்துறையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-8 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத நாமக்கல் மாவட்டத்தில் 2,594 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி, தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தி ஸ்பெக்ட்ரம் அகாடமி மெட்ரிக் பள்ளி என 7 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்