பூலாம்பட்டியில் படகு சவாரி செய்து உற்சாகம்

தொடர் விடுமுறையால் ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பூலாம்பட்டியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2023-10-24 20:10 GMT

எடப்பாடி:-

தொடர் விடுமுறையால் ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பூலாம்பட்டியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பூலாம்பட்டி

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்பட்டு நீர் மின்உற்பத்தி நடந்து வருகிறது. இங்குள்ள அணைப்பகுதியில் சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்த கதவணை பகுதியில் நிலவும் இயற்கை சூழலையும், ரம்யமான காட்சிகளையும் அனுபவிக்கும் நோக்கில் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

சுற்றுலா பயணிகள்

தற்போது தொடர் விடுமுறை என்பதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். அவர்கள் நீர்மின் உற்பத்தி நிலையம், கதவணை மேம்பாலம், மதகுபகுதி, நீர்உந்து நிலையம், நீர்சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியின் இயற்கை அழகையும் கண்டு ரசித்தனர்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் கதவணை நீர்பரப்பில் விசைப்படகு சவாரி செய்தும், அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவுகளை ருசித்தும் பொழுதை கழித்தனர்.

சாமி தரிசனம்

விடுமுறை தினத்தையொட்டி இப்பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவில், காவிரித்தாய் சன்னதி, காவிரி கரையோரத்தில் பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் ஆலயம், காவிரி படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் இப்பகுதியில் போலீசாரும் கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் ஏற்காடு, மேட்டூரிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்