ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
கோடை காலம் தொடங்கி உள்ளநிலையில் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். இதேபோல் ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பென்னாகரம்
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன. இதனால் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு திரண்டு வந்தனர்.
விற்பனை விறுவிறுப்பு
பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகளில் பலர், முதலை பண்ணை காவிரி ஆறு மற்றும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பாக குளித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு செல்பி எடுத்து கொண்டனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
ஏற்காடு, மேட்டூர்
இதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி ெபற்ற மேட்டூர் அணை மற்றும் பூங்காவிலும் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், பவளவிழா கோபுரத்தில் ஏறி அணையின் தோற்றத்தையும் கண்டு ரசித்தனர். மேலும் பூங்காவில் சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக சீசா ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மீன் வறுவல் கடைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிலும் நேற்று காலை முதலே சுற்றுலாபயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் அவர்கள் உற்சாகமாக படகு சவாரி செய்த நிலையில், பூங்காவிலும் பொழுதுபோக்கினர்.
வெயிலின் தாக்கம் அறவே இல்லாத நிலையில் இதமான குளுகுளு சூழல் நிலவியதால் ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.