30 எழுத்தறிவு மையங்களில் 600 பேர் தேர்வு எழுதுகின்றனர்

திருவாடானை யூனியனில் 30 எழுத்தறிவு மையங்களில் 600 பேர் தேர்வு எழுதுகின்றனர்

Update: 2023-03-16 18:45 GMT

திருவாடானை, 

திருவாடானை யூனியனில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 30 எழுத்தறிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வரும் இந்த மையங்களில் ஒரு மையத்திற்கு 20 பேர் வீதம் 30 மையங்களில் 600 நபர்களுக்கு எழுத்தறிவிக்கப்பட்டு வருகிறது. மையங்களில் 62 ஆண்களும், 538 பெண்களும் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஒரு வாரத்தில் 600 நபர்களும் தேர்வு எழுத உள்ளனர். இது குறித்து அனைவருக்கும் கல்வித் திட்ட வட்டார மேற்பார்வையாளர் கார்த்திக் கூறியதாவது:- இந்த மையங்களில் எழுத்தறிவு பெற்று வருபவர்களுக்கு பயிற்சி புத்தகம், சிலேடு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் படிப்பவர்கள் வருகிற 19-ம் தேதி தேர்வு எழுத உள்ளனர். தேர்வின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

சோழகன்பேட்டை எழுத்தறிவு மையத்தின் தன்னார்வலர் பத்மபிரியா கூறியதாவது:- தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை எங்கள் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் எழுத்தறிவு மையம் செயல்படும். இந்த மையத்தில் கற்பவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று விட்டு வருபவர்கள். மையத்தை தொடங்கும் போது கதை சொல்லி தொடங்குவோம். திருக்குறள் வாசிப்போம் அவரவர் வீடுகளில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேசுவோம். சிறிய விடுகதைகள், விளையாட்டுக்கள் மூலம் எழுத்தறிவு வகுப்புகள் நடைபெறும். எங்கள் மையத்தில் படித்த அனைவரும் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்