முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

நித்திரவிளை அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கழுத்தை அறுத்துக் கொண்டு முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2023-02-26 19:47 GMT

மார்த்தாண்டம்:

நித்திரவிளை அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கழுத்தை அறுத்துக் கொண்டு முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

முன்னாள் ராணுவ வீரர்

நித்திரவிளை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

ஜெயக்குமார் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்...

இந்தநிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று காலையில் வீட்டிற்கு அருகில் உள்ள சாலையோரம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

இதனை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவருடைய உறவினர்களை வரவழைத்து ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதே சமயத்தில் வீட்டில் அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், தான் இது வரை சம்பாதித்த பணம் அத்தனையும் சூதாடி தொலைத்து விட்டேன் இனிமேலும் நான் உயிரோடு இருந்தால் உங்களால் சந்தோசமாக வாழ முடியாது. ஆகையால் நான் சாக போகிறேன். யாரும் வருத்தப்பட வேண்டாம் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்